தடத்தில் இருந்து விலகிய மாட்டை வண்டி தடத்திற்கு திருப்பி ஓட்டிய சீனி நாயக்கரின் மனம் மிக கலக்கமடைந்திருந்தது.
நேற்று இரவு ஊர் முழுதும் யாரும் உறங்கவில்லை. இவரும் உறக்கம் பிடிக்காமல் திண்ணையில் "தெள்ளவல்லாலு ''1* குத்துக்கால் வைத்து உட்கார்ந்து விட்டு இனி சரிபடாது என்று வண்டி கட்டிக் கொண்டு "சேனிக்கு''2* கிளம்பி விட்டார். ஆனாலும் மனம் ஒரு நிலையில் இல்லை. வந்த இடத்தில் வாயை மூடி நம்ம வேலையை நாம பார்த்தாலும் இந்த பயங்க பாக்க விடணுமே
தங்கள் வீட்டு பெண்கள் தெரு முனையில் நின்று சண்டையிட்டு ஒருவர் முடியை மற்றவர் இழுத்து கூச்சல் போட்டு கொண்டு இருக்க இந்த பெண்கள் அடக்கமாக சாணியால் முற்றம் அலம்பி கோலம் போடுவதும், நல்ல படியாக சமைத்து குடும்பத்தினற்கு பரிமாறி , இன்முகத்துடன் வளைய வருவதும் அவ்வூரினரின் பொறாமையை மெல்ல கிளறி விட்டது.
சமயம் பார்த்து துரைகளிடம் வத்தி வைக்கப்பட்டது. அதுவும் முக்கியமாக பெண்களை பற்றியும்,அவர்களின் அழகைப் பற்றியும். அவன்களோ சண்டாள பயல்கள். கேக்க வேணுமா ? அழகாகஇருப்பது குறித்து அவ்வூர் பெண்கள் வருத்தப்படும்படியானது .பெண்களை காப்பாற்றுவதே இப்போது இவர்களின் முக்கியமான வேலையாக ஆகி விட்டது.
இத்தனை நாள் காடு கழனிக்கு தனியாக செல்வது மட்டுமே ஆபத்தாக இருந்தது. வெள்ளைக்காரன் தூரமாக வரும் போதே ஊருக்குள் தகவல் வந்து விடும்.உடனே இளம் பெண்களை மாட்டுக்கு வைக்கோல் போடும் காடியில்3* படுக்க வைத்து மேலே நிறைய வைக்கோல் போட்டு மூடி விடுவர். மேலெல்லாம் சுல் சுல்லென்று வைக்கோல் குத்த, மாடு எங்கே வைக்கோலுடன் நம்மையும் குதறி விடுமோ என்று அந்த பெண்கள் அனுபவித்த வேதனை.........
ஆனால் ரெண்டு நாள் முன்னாடி ராத்திரி நடந்தது மிக அநியாயம். குறிப்பாக அடையாளம் சொல்லப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்க முடியாமல் தகவல் சொன்னவனையே , வெள்ளைக்காரன் அடி சவட்டி விட அவன் நாட்சியாரம்மா வீட்டுக்கு கைகாட்டிவிட்டான்.
சீனி நாயக்கரின் அண்ணன் மகன் கொண்ட நாயக்கர். கொண்ட நாயக்கரின் மனைவி நாச்சியார் பேரழகி. நல்ல இல்லாள். திருமணம் ஆகி ஆறே மாதம் தான் ஆகி இருந்தது. காடியில் ஒளிந்திருந்த நாட்சியாரை (''துப்பு சொன்ன படவா கட்சிதமாக சொல்லி இருக்கான்'' ) முடியை பிடித்து வெள்ளைக்காரன் வெளியே இழுத்து போட்டான் . ஓடோடி வந்து தடுத்த கொண்ட நாயக்கரை நாலு கையாள்கள் சேர்ந்து கொண்டு கழியால் அடித்த அடி சொல்லி மாளாது . தலையில் வழிந்த இரத்தத்துடன் அவரும் நினைவு தப்பும் வரை மனைவியை காக்க போராடினார். அவர் நினைவு தப்பிய அந்த நொடியில் வெள்ளையன் பிடியில் இருந்து திமிறிய நாச்சியார் கொல்லை கிணற்றில் குதித்தாள் .குதித்த நொடியில் மூச்சை அடக்கி உள்ளே சென்று சமாதியானாள்.இருட்டில் தேடி வெளியே எடுக்கும் போது நாட்சியார் தெய்வமாகி விட்டாள் ,ஊருக்கே!! (வெள்ளையன் ஆண்ட காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் இல்லாத இடம் இல்லை.)
சீனி நாயக்கர் மனதுக்குள் மிக விசனப்பட்டுப் போனார். எப்படிப் பட்ட பொண்ணு! சொந்த மக மாதிரியா பிரியமா இருப்பா. (சின்ன மாவா !! மீ ஒகரிக்கி கோசரம் எசுறு பெட்டதி ஏமிட்டிகி? இக்கட வொச்சி போஞ் செய்யண்ட!)4*வீட்டம்மா இறந்த பிறகு ஆதரிக்க குழந்தைகள் இல்லாமல் 8 வருடமாக வெந்து வேகாமல் தானாக சமைத்து சாப்பிட்டு நொந்து போயிருந்த சீனி நாயக்கருக்கு நாட்சியார் மருமகளாக மட்டுமல்ல அன்ன பூரணியாகவே இருந்தாள்.
''இட்டனே போத்த மனக்கு பத்துகு ரேதுரா சீனி!!!!"5* வண்டி ஒட்டி கொண்டே சீனி நாயக்கரின் மனம் வேகமாக சில கணக்குகள் போட்டது. ஊரில் உள்ள சிலருடன் பேசி ஒரு திட்டம் வகுத்தனர் .அந்த திட்டம் இவர்களின் வாழ்க்கையை பல பல படிகள் உயர்த்தியது !
1*-விடிய விடிய
2*-தோட்டத்துக்கு
3*-மாடுகள் நிற்கும் கொட்டகையில் அவற்றுக்கு முன்னாள் உள்ள நீளமான தடுப்பு பலகையுடன் வைக்கோல் போட உள்ள அமைப்பு .
4* சின்ன மாமா!! உங்க ஒருத்தருக்கு தனியாக சமைப்பது ஏன் ? இங்க வந்து சாப்பிடுங்க !
5*இப்படியே போனா நமக்கு பிழைப்பு இல்லடா சீனி !!!
