Monday, November 18, 2013

8.ரங்கூன் பாட்டி part-3


திண்ணையில் சாய்ந்தவாறு பாட்டியைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.ரங்கூன் பாட்டி  தன் வளைந்த முதுகை முடிந்தவரை நேராக்கி நிமிர்ந்து, கண்களை இடுக்கி சூரியனை பார்த்து  கை கூப்பி வணங்கி விட்டு ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தவர், என்னை கண்டவுடன் குழந்தை போல
 சிரித்தார்.


''பள்ளீட்டம் போலனா பாப்பா?''  (பள்ளிக்கூடம் போகலையா பாப்பா?)

''போவாலா அவ்வா!'' (போகணும் பாட்டி!)

''சரி சாயங்காலம் வா. உனக்கு கடலை உருண்டை பிடிச்சி தரேன்''.



நான் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த சமயம் அது. எந்நேரமும் பாட்டி வீட்டில் தான் விளையாட்டு. பாட்டிக்கு அப்போது 90 வயது இருக்கும். கூர்மையான புலன்கள், சலியாத உழைப்பு. வயதும் காலம் சுமந்து வந்த கஷ்டங்களும் அவரின் மன தைரியத்தையும், சக மனிதர்கள் மேல் அவர் வைத்திருந்த பிரியத்தையும் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. எங்களை சுற்றி உட்கார வைத்து அருமையான கதைகள் கூறுவார். பாட்டிக்கு குழந்தைகளிடம் இருந்த பிரியம் அருமையானது. என் நினைவில் அழுத்தமாக பதிந்த ஒரு விசயத்தை சொல்கிறேன்.

லட்சுமிபுரம் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு. (அங்கு படித்தது அந்த ஒரு வகுப்புதான்.) பள்ளியில் தரும் சத்துணவு ஒத்து கொள்ளாது என்று அம்மா வீட்டில் இருந்து சாப்பாடு அனுப்புவார்.

என்னை ஒரு நாள் கூப்பிட்ட ஸ்ரீராம் சார்,(ஹெட் மாஸ்டர்),"அப்பா கிட்ட பேசணும், இன்னிக்கு வீட்டுக்கு வரேன்''.

வீட்டுக்கு வந்த அவர் அப்பாவிடம்,''சார், தப்பா நினைக்க கூடாது. இனிமே உங்க பொண்ணுக்கு வீட்டில் இருந்து சாப்பாடு அனுப்ப வேண்டாம். ஸ்கூல்லயே சாப்பிடட்டுமே.''.

அப்பா,  அடடா, சார், இதை சொல்ல நீங்க  வரணுமா? ஒன்னும் பிரச்னை இல்லை.'.அம்மாவை பார்த்த அவர்,அம்மா, நல்ல சாப்பாடு குடுக்கறோம். நீங்க பயப்பட வேண்டாம். அம்மா, என்ன சார் நீங்க? அப்படில்லாம் ஒண்ணும்  இல்ல.''அந்த மட்டும் விஷயம் முடிந்தது.

 எனக்கு ஒரே குஷி. இனி தினமும் பள்ளிக்கு எல்லோரையும் போல் தட்டு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். பெரியம்மா வீட்டுக்கு ஓட்டமாக ஓடினேன்.
 " சீத்தம்மா, எனக்கு அந்த முட்டை மாதிரி இருக்கற தட்டு வேணுமே.தினம்  ஸ்கூல்ல இருந்து வந்ததும் உங்ககிட்ட கொடுத்துடறேன்.''

"அட, கொண்டு வந்து குடுக்க வேண்டாம்'. இந்தா உனக்கு இல்லாததா.நீயே வச்சுக்கோ.'' (கீழே நான்கு குமிழ்கள் கொண்ட அந்த தட்டு எனக்கு மிக விருப்பமான ஓன்று. இப்போது போல் சொந்தங்களுக்கு இடையே நிறைய கட்டுபாடுகள் இல்லாத காலம் அது. எவர் வீட்டுக்கும் செல்ல ஒரு call செய்து time fix செய்ய வேண்டிய அவசியம் இல்லை.மிக எளிமையாகவே எல்லோரும் இருந்தனர்.)

 மறுநாள் பள்ளியில் கொடுத்த கோதுமை சாதமும், அந்த பருப்பும் நன்றாகவே இருந்தது. இப்போது உள்ளது போல் சத்துணவுக்கு வரும் பொருள்களை யாரும் திருடி விற்காத காலம் கலப்படம் இல்லாத காலம்.(1978).

SCHOOL IS BEHIND THE TEMPLE.

சாப்பிட்டவுடன் நேரே ஹெட் மாஸ்டரிடம் போய், "சார்,சார், எங்க பாட்டி ஒருத்தவங்க பக்கத்து வீட்ல இருக்காங்க. இங்க நிறைய சாப்பாடு இருக்கே. அதுல கொஞ்சம் குடுக்கறீங்களா? அவங்களுக்கு குடுக்கனும் ''.

" அது முடியாதேம்மா. ம்ம்ம் ! அவங்களுக்கு சாப்பாடு குடுக்க யாரும் இல்லையா?''

"அவங்களே எல்லாருக்கும் சாப்பாடு குடுப்பாங்க சார். ஆனா அவங்களுக்கு பல்லு இல்லையா? அதனால சாப்பிட கஷ்டப்படுவாங்க.இங்க குடுக்கிறது நல்லா இருக்கு. அதோட இங்க எனக்கு குடுக்கறது எல்லாதையும் என்னால மட்டும் சாப்பிட முடியல.''

 அவருக்கு என்ன தோன்றியதோ ,''சரி ,வாங்கிட்டு போய் குடு''. என்றவர் ஆயாவிடம் என்னை அழைத்து சென்றார்.
 ''ஆயா இந்த பொண்ணு  சாப்பிட்ட வுடனே தினம் தட்டை கழுவி அதுல மறுபடியும் சாப்பாடு போட்டு குடுங்க. ''
 ''இங்க பாரு, சாப்பாட்டை குடுத்துட்டு பராக்கு பார்க்காம ஓடி வரணும். லேட்டா வந்தா முட்டி போடணும்.சரியா?''

''செரிங்க சார்''.

ஆயாம்மா ஆவி பறக்க என் தட்டில் போட்டு கொடுத்த உணவை இன்னொரு பெண்ணின் தட்டை வாங்கி மூடி எடுத்துக் கொண்டு , ரோடை தாண்டி ஒரே ஓட்டம். (இப்போது அதே ரோடை தாண்டி செல்ல ஐந்து நிமிடமாவது காத்திருக்க வேண்டும்.)

மூச்சிரைக்க ஓடி வந்து, "பாட்டி, இந்தாங்க உங்களுக்காக ஸ்கூல்ல இருந்து கொண்டு வந்தேன்'', என்ற போது என்னுள் இருந்த சந்தோசம் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.

  தினம் இது தடங்கல் இன்றி நடந்தது. அவ்வளவு ஆசாரமான பாட்டி எப்படி அந்த உணவை சாப்பிட்டார்? இத்தனை வயதுக்கு அப்புறம் புரிகிறது. அது நிச்சயம் எனக்காகத்தான்! ஒரு சாதனை போல் அதை நினைத்த என் மகிழ்ச்சிக்காக மட்டும்தான்...