Saturday, September 22, 2012

7. ரங்கூன் பாட்டி . PART - 2

                       
      அறுவடை முடிந்த  நெல் ரெண்டு  ஆள் உயரத்திற்கு  அங்கங்கு குவிக்க பட்டு இருந்தது.  சேர்த்து குமிச்சு வச்சா கைலாசநாதர் கரடு உயரம்  குமிக்கலாம் .ரெண்டு மூணு நாளாவே எல்லாரும் கூடி கூடி பேசுறாங்க! ஆம்பளையாளுங்க கூட அழுகிறாங்க !  பாட்டியின்  பெரிய பெண்  லக்ஷ்மம்மாவுடைய பிள்ளைகள் ஒன்பது பேரும் சின்ன குழந்தைகள் ! அதுங்க மட்டும் தான் சந்தோசமா விளையாடுது.தாத்தா  பாட்டிக்கு  மனசுக்குல எவ்வளவோ இருந்தாலும் வெளிய காமிச்சுக்காம இருக்காங்க.

பக்கத்து தோட்டத்தை சேர்ந்த பர்மியர்கள் நிறைய பேர் வந்து ஆறுதல் சொல்லி சென்றனர். நாளுக்கு நாள் நிலைமை மோசமாக ஆகிக் கொண்டு வந்தது.  ஜப்பானியர்கள் முன்னேறினர். பிரிட்டிஷ் - இந்திய படைகள் பின்வாங்கின.           



                              பசங்கள்ள அழகர் சாமி தான் பெரியவர் . இருபது சொச்சம்            
வயது....முன்னாலும்  பின்னாலுமாக பதினாறு பேர். இத்தனை பிள்ளைகளை பெற்று அவர்களை  நல்ல முறையில் வளர்த்து,  வயிறு வாடாமல் நேரத்திற்கு சமைத்து போட்டு, மிக   இக்கட்டான அந்த நிலையிலும் கலங்காமல் வளைய வந்த பாட்டியின் உறுதி எவ்வளவு என்று  கற்பனை செய்யக் கூட  முடியவில்லை .
                   "எய்யா அழகர்சாமி , தூத்தல் வொச்சட்ட வுந்தி , தொரக்க போயி கிடுகுலு பெண்டி ஒட்டுலுனு மூசிடுவுப்பா !" (சாரல் விழும்போல இருக்கு . சீக்கிரம் அந்த தட்டிய வச்சு நெல்லை மூடிருப்பா! ) , அம்மாவின் (பாட்டியின்)
குரல் கேட்டவுடன் பசங்க எல்லோருமே ஓடி வந்து அண்ணனுக்கு உதவி செய்தனர் .

       













      தாத்தாவும் , குருசாமியும் உள் அறையில் நெடுநேரமாக பேசிக் கொண்டு இருந்தனர். வெளியே வந்த இருவர் முகத்திலும் ஆயுசே இல்லை. குருசாமியை அனுப்பி விட்டு அடுப்படிக்கு வந்தார் .

"ம்ம்க்க்க்!"

"ஏமி , நீலு காவல?! " (என்ன தண்ணி வேணுமா?)

"இக்க ஏமி  லேதும்மா இக்கட ! " (இனி ஒண்ணும்  இல்லமா இங்க!)  தாத்தாவின் குரல் கம்மியது. கால் நூற்றாண்டு உழைப்பு ! ஒரு வார்த்தையில் உதறினார் .

               பாட்டிக்கும்  மற்றவர்களுக்கும் அந்த ஒரு வார்த்தை கூட வரவில்லை . வார்த்தைகள் இல்லாத சோகம் மிக கனமாக அனைவரின் நெஞ்சையும் அழுத்தியது. எதை கொண்டு செல்வது , விட்டு செல்வது. சுவர் சுவராக தடவிப் பார்த்தனர். பழங்கள் காய்த்து  தொங்கிய மரங்களை குழந்தைகள் கட்டிக் கொண்டன.... லக்ஷ்மம்மாவின் குழந்தைகள் விளையாட்டு சாமான்களை கட்டி கொண்டு விட மாட்டோம் என அழுதனர். தாத்தா  கனத்த இரும்பு பீரோவை திறந்தார். ( இக்க எப்புடு இதி தெரிசதி?) (இனி எப்போ இதை திறக்க?) கண்ணீரில் மசமசத்த கண்ணை துடைத்துக் கொண்டே பணத்தையும் , நகைகளையும் ஒரு துணியில் கட்டினார்.சுமக்க முடிந்த அளவு மிக முக்கியமான  உணவும் , மருந்தும் , துணிமணியும் கட்டி வைக்கப்பட்டன. அரிசி , பருப்பு மற்றும் மிக தேவையான பாத்திரங்கள் என  அவர்கள் இயந்திரங்கள் போலே இயங்கினர். தூரமாக தெரிந்த புகை மூட்டம் வேறெந்த சிந்தனையும் கொள்ள விடாமல் அவர்களை இயக்கியது!.

                    உள்ளே இருந்த கிருஷ்ணரின் படம் எடுத்து வரப்பட்டு நெல் குமியலில் சாய்த்து வைக்கப்பட்டது. பாட்டி பெரிய வெண்கல விளக்கை உள்ளிருந்து எடுத்து வந்து ஏற்றி வைத்தார் ! கிருஷ்ணரின் எதிரில் விழுந்து கும்பிட்ட பாட்டி  பெரிய கேவலுடன் கிட்னா !! கிட்னா !! என எழுந்து படத்தை கட்டிக்கொண்டார் . அது வரை அனைவரின் மனதிலும் அடக்கிய சோகம் எரிமலையாய்  பொங்க,  பெரியவர்கள் குழந்தைகள் பேதம் இன்றி மொத்த குடும்பமும் ஓடிசென்று கிருஷ்ணரின் மேல் விழுந்து கதறி அழுதது !

                       இவர்கள்  அழுகை சத்தம் கேட்டோ இல்லை அவற்றுக்கு புரிந்ததோ ??   ம்மா! ம்மா! ம்மா! கொட்டிலில் இருந்து மாடுகள் கதறின. கண்களில் நீர் பெருக அனைத்தும் கயிறை  இழுத்து படாத பாடு பட்டன .  வற்றாத பால்  கொடுத்து இந்த குடும்பத்தையும் , குழந்தைகளையும் காத்த அம்மாக்கள் ! அவற்றை அனாதையாக விட்டு செல்ல வேண்டி இருப்பதைதான் அவர்களால் தாங்க முடியவில்லை .  பாட்டி  ஓடி சென்று ஒவ்வொன்றையும் சேர்த்தணைத்து அழுதார்.
"நா தல்லி  எட்ல  உதுலுத்து ?" "என் அம்மா! எப்படி விட்டு செல்வேன்?"
கை நிறைய வைக்கோல் எடுத்து அவற்றுக்கு உதறி போட்டார் .
"ம்ம்ம்மமா"!! திரும்பி பார்க்காமல் காதை பொத்திக்கொண்டு கதறியவாறு வெளியேறினார் .





                குழந்தைகளை மட்டும் ஏற்றி கொண்டு செல்ல ஒரு வண்டி பூட்டப்பட்டது .
பாட்டியின் பிள்ளைகள்  பதினாறு பேரும்  பேரக்  குழந்தைகள் ஒன்பது
பேரும் , பெரியவர்களும் , சில வேலை ஆட்களுமாக  முப்பது  சொச்சம் பேர்  .



                                                                                                                                                 
 இத்தனை பேருக்கு நிழல் கொடுத்த வீடு , மாடுகள், சாப்பாடு போட்ட நிலங்கள், நிலம் நிறைந்த விளைச்சல், ஒரு வருடம் பாடுபட்டு எடுத்த நெல் , அத்தனையும் அப்படியே உதறி விட்டு ....

எப்படி மனம் வெந்து போயிருக்கும்? பிள்ளைகளை கொண்டு போய் பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும் . அது ஒன்று மட்டுமே அவர்களின் மனத்தில் இருந்தது .  அனைவரின் தலையிலும் சிறு சிறு துணி மூட்டைகள் .
லக்ஷ்மம்மாவின்  பெண்களில்  பெரியவள் அட்சம்மா , ஏழு வயதுக்கு தன்னை சுற்றி நடப்பதன் கனம்  புரிந்து அமைதியாக தன் துணி பையை தலையில் வைத்து கொண்டு , பாட்டியின்  கையை பற்றிக் கொண்டு நடந்தாள் .

"எப்புடு மன இட்டிகி திரிகி வோஸ்துமு?! "  எப்ப நம்ம வீட்டுக்கு திருப்பி வருவோம்?!
                     "ஒரேய், நா குர்ரம் பொம்மனு   மச்சம் கிந்த தாச்சி பெட்டினானு! மல்லி எதுகுட்டா!"  "டேய் ,என் குதிரை பொம்மையை கட்டில் அடியில ஒளிச்சு வச்சிருக்கேன் ! அப்புறம் வந்து எடுத்துக்கலாம் !"

பர்மிய நாட்டுக்குள் நுழையும் போது ஆயிரம் கனவுகளுடன் வந்த அவர்கள் நடை தளர்ந்து வெளியேறினர். தாய் நாட்டை நோக்கிய நெடும்பயணம் தொடங்கியது .
                         

Thursday, September 20, 2012

6. ரங்கூன் பாட்டி !! Part-1

ரங்கூன் பாட்டி - சிலரின் பெயரை சொல்லும் போதே அவர்களின் அன்பையும் பிரியத்தையும் நாம் சேர்ந்து உணர்வோம் . இந்த பெயர் அப்படிப்பட்ட ஒரு உணர்வை எங்கள் எல்லோருக்கும் தரும் .


இங்கிருந்த சொத்துக்களை பராமரித்துக்கொள்ளுங்கள் என்று சொந்தங்களிடம் விட்டு விட்டு பர்மாவுக்கு சென்ற அந்த தம்பதியை அந்த தேசம் அணைத்துக்கொண்டது . மிக கடினமான உழைப்பு , இயற்கை என்று எல்லாம் துணை செய்ய மிக நல்ல வாழ்க்கையை வாழ்ந்தனர்.
பதினாறும் பெற்ற பெரு வாழ்வு . ஆமாம் ,மொத்தம் பதினாறு குழந்தைகள்.



















           வீட்டில் பெண்கள் சமைத்து கொண்டே இருக்க வேண்டும் . வேலை ஆட்களும் குழந்தைகளும் , தொழுவம் நிறைந்த மாடுகளும் என எப்போதும் திருவிழாதான்.
மீன்  வேணுமா?  "எய்யா !!அழகர்சாமி !! போயி கொச்சம் மீனு எதுகு ராயா !!( போய்  கொஞ்சம் மீன் எடுத்துட்டு வாப்பா !) பாத்திரத்தோடு வயலுக்கு சென்றால் நெல்வயலில் தேக்கிய நீரில் இருந்து வேணுமான அளவு மீன் வீட்டுக்கு வந்து விடும்! நீரும் நீருடன் இணைந்த வாழ்வும் அற்புதமாக இருந்தது .

            ரங்கூன் பாட்டி  ( நங்கள் பார்த்த போது தான் பாட்டி . இந்த இடத்தில் நடு  வயதுதான். ஆனால் இப்படி கூப்பிட்டால்தான் என்னால் கதை சொல்ல முடியும்)  தன்  மூத்த மகள் லக்ஷ்மம்மாவை தன்  தம்பிக்கு திருமணம் செய்து வைத்தார் . எல்லோரும் கூட்டு குடும்பமாக  மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.



             வயலில்  காய்கறிகளும் நெல்லும் மூட்டை மூட்டையாக விளைந்தது!  தங்களின்  வேலையாட்களுக்கும் பங்கிட்டு அளித்தனர்.போரும் புரட்சியும் ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களின் நல்ல நேரம் சில சின்ன பெரிய சங்கடங்கள் தவிர வேறு  இடையூறுகள்  இல்லை.

              அந்த நாள்  1946 இன் கடைசி மாதத்திலோ   1947 இன் முதல் மாதத்திலோ  இருக்க வேண்டும் .பக்கத்து தோட்டத்தில் இருந்து குருசாமி இவங்க வீட்டுக்கு வந்து  கதவை தட்டும் போது  நட்ட நடு நிசி . மிக பதட்டமாக இருந்தார் . கைகள் விடாது நடுங்கியவாறு இருந்தது! அவரை பெரும்பாடுபட்டு சமாதானம்  செய்ய வேண்டிஇருந்தது ...   "எண்ணா !!ஒதினே !!  நாம  மோசம் போயிட்டோம் !! என திடீரென தலையில் அடித்துக்கொண்டு அழ  ஆரம்பித்து விட்டார் .

               "ஒய் !!குருசாமி  என்னப்பா தங்கச்சிக்கு உடம்பு எதனா
சௌக்கியமில்லையா ??"

           எண்ணா !! இப்ப  "யோங்கோன் " னும் அவன் சம்சாரமும் வீட்டுக்கு வந்து ஒரு தகவல் சொல்லிட்டு போனாங்க ! அவன்  முதலாளி  அரசாங்கத்துல முக்கியமான ஆளு .சப்பான்காரன் உள்ள பூந்த இந்த நேரத்த சாக்கா வச்சு  நம்மள அடிச்சு விரட்ட இவனுங்க ஒரு திட்டம் போட்ட மாதிரி இருக்காம் ! சப்பான்காரனும் அநேகமா குண்டு போடுவான் போல இருக்காம் !  பிள்ள குட்டிங்கள வச்சுகிட்டு என்ன செய்ய போறோம்னு ஒன்னியும் புரியலண்ணே!!சின்ன பிள்ளை போல விசும்பி அழுதார்.
 பெண்கள் குரல் எடுத்து அழ ஆரம்பித்தனர்.   சத்தம் கேட்டு எழுந்த குழந்தைகள் அரைகுறை தூக்கத்தில் கத்த ஆரம்பித்தனர். ஒரே அதட்டல் போட்டார் தாத்தா ..

           "இப்புடு ஏமிட்டிகி  ஈ  கூத்தலு !! (இப்ப ஏன் இப்படி கத்துறிங்க ?)
 இது என்னைகின்னாலும் வரும்னு தெரிஞ்சதுதானே !!
கேளு  குருசாமி !!, யோங்கோன் சொல்றதை நாம முழுசும் நம்ப முடியுமா?  ன்னா  முடியாது!!

       ஆனா   உள்ளூர் ஆளுங்களுக்கு  வன்மம் இல்லேன்னு நினைக்க,  நாம ஒன்னும் பச்ச குழந்தைங்க இல்லே! எங்க இருந்தோ வந்தவங்க கிட்ட கூலியாளா இருக்கிறது ஒவ்வொருத்தன் மனசுலயும் இருக்கும்!! எங்கயும் இருக்கிறதுதானே ?!! இது வரைக்கும் நாம  தெளிவா இருந்தது பெரிய விஷயம் இல்லே !!இனிமேட்டு தான்  ரொம்ப தெளிவாவும் தைரியமாவும் இருக்கணும் . அத விட்டுட்டு  அழுதா எப்பிடி?

          விவேகத்துடன் அவர் பேசியவுடன் அனைவரின் முகத்திலும் தெளிவு வந்தது . கண்ணை துடைத்துக்கொண்ட குருசாமி ,"  நீங்க சொன்ன மாரி   ஒக்காந்து அழுதா தீந்து போகும்னா இன்னிக்கு பூரா அழுகலாம் !! ஆனா  நம்ம சுமைய நாமதான சொமக்கணும் !! காலையில நம்ம ஆளுகளை  கூட்டிட்டு வரேண்ணே . பேசலாம்" என்று விட்டு  தளர்வுடன் வெளியேறினார் .
கனத்த மனதுடனும் ,இனம் புரியாத பயத்துடனும் ஆளுக்கு ஒரு மூலையில் முடக்கிக் கொண்டனர்.

சிறு வயதில் பெரியவர்கள் செய்யும் சில விசயங்கள் இப்போது நினைவில் வருகிறது !! ஏதாவது கஷ்டத்தில் மனசு மிக சலனப்படும் போது  அவர்கள் தினப்படி வேலையுடன்  மிக ஒன்றி கவனத்துடன் , செயல்படுவதை கவனித்து இருக்கிறேன். அது ஏன்  என இப்போது தெளிவாக புரிகிறது. முடிவெடுக்க முடியாத ஒரு பிரச்னை வரும்போது தியானம் செய்ய சொல்லி இப்போதைய CARPORATE குருமார்கள் சொல்வதை அவர்கள் போகிற போக்கில் செய்துள்ளனர்! 



     



















                             பாட்டி வெள்ளனே எழுந்து குளித்து சூரியனுக்கு நமஸ்காரம் செய்து விட்டு ,வெண்கல விளக்கையும்  , பூஜை சாமான்களையும்  பளபளவென தேய்த்து துடைத்தார் . வீட்டில் இருந்த மிகப்பெரிய கிருஷ்ணர் படத்தின் முன் அதை வைத்து விளக்கேற்றி விட்டு விழுந்து கும்பிட்டார். கண்களில் நீர் குளம் கட்டியது. இரு கையை கூப்பி ,
"ஏமி அவ்வினானு சூஸ்தமுரா  கிட்ணா! ,நுவ்வு மட்டு மா கூடனே வுண்டு! (என்ன ஆனாலும் பாக்கலாம்டா  கிருஷ்ணா! நீ மட்டும் எங்க கூடவே இரு!)


கிருஷ்ணரை துணைக்கு அழைத்த பாட்டியின் பயணம் அதன் பின் நிற்கவே இல்லை !





Wednesday, September 12, 2012

5. சுந்த்ராஜும் , நேருவும் !!!

                   கால் மாற்றி கால் மாற்றி நின்றார். மனசு ஆற மாட்டேங்குது . ஒருத்தருக்கும் இவர் தவிப்பு புரியல்ல!  இல்லன்னா ,"நீயும் வா. கொஞ்ச நேரந்தானேனு  கூப்பிட்டிருப்பாங்கல்ல ? ."   "ஒரு மணி நேரத்தில இங்க  கொள்ள போறதுக்கு என்ன இருக்கு ? அடகு வச்ச ரெண்டு பிஞ்சு போன மூக்குத்தி ,கம்மலும், நாலு ரெட்டை வட செயினும்தான் இருக்கு . இதுக்கு ஒரு காவக்காரன்தான் கேடு ."

                   











                  சுந்தரராஜன் கிராம கூட்டுறவு வங்கிக்  காவலாளி .  ஜவஹர்லால் நேருவை வரவேற்க ஜில்லாவே ஒரு வாரமாக ஒரே கொண்டாட்டமாக இருந்தது . வங்கி ஊரின் எல்லையில் இருப்பதால் காவல் அவசியம் . இவருக்கு வேலையில் சேர்ந்த புதிது . அதனால் தனக்கு அன்று வேலை நாள் ,தான் வேலைக்கு சென்றாக வேண்டும் என்று தோணவேயில்லை. காலையில் கணக்குபிள்ளை கூப்பிட்டனுப்பி ,
" ஏய் ! சுந்த்ராஜு ! நீ பாட்டுக்க நேரை பாக்கறேன் ! கீரை பாக்கரேன்ட்டு போயிராதப்பு ! பிரசெண்டு நாயிக்கரு பிச்சுப்புடுவாரு !அம்புட்டுதான் சொல்லுவேன் . ஆமா !!""

               கணக்கப்பிள்ளை சொன்ன பிரசெண்டு நாயக்கரின் பெயரும்
சுந்தரராஜன் தான் ! நம்ம போத்தி  நாயக்கரின் சின்ன அல்லுடு !(மருமகன்) அவரின் காலம் மட்டும் அவர்தான் பிரசிடென்ட் ஆகவும், ஜில்லா கவுன்சிலர் ஆகவும் மாற்றி மாற்றி இருந்தார்.   அவர் உயரமும் , ஆகிருதியுமாக தெருவில் வரும்போதே படியில் உட்கார்ந்து வெட்டி கதை பேசுபவர்கள் எல்லாம் மெல்ல வீட்டினுள்ளும் , பக்கத்து சந்திலும் புகுந்து விடுவார்கள்.. கம்பீரமான தன் சத்தத்திலேயே எதிராளியை   சாய்த்து விடுவார் .

                        நம்ம  சுந்த்ராஜுக்கு ஆறவேயில்லை !  உள்ளே உதறினாலும் நேரே சுந்தரராஜ நாயக்கரிடம் போய்  விட்டார்.!

#ஏமிரா ? *# ...............#எண்ணா !!!....*#    .......#செப்பு ஏமி ? *# .......#.ஏமி  ரேது!*#
என்னடா?                     அண்ணே!                      என்ன சொல்லு?       ஒண்ணுமில்லே!


" பின்ன என்ன ? போ !! போயி இரு ! ஊர் பக்கம் வேடிக்க பாக்க வந்துராதே!''

''செரிண்ணா !!''   பேசாம வாயை  மூடிக்கொண்டு  வந்து  விட்டு  இப்போது புலம்பித் தவித்துக் கொண்டிருந்தார் .

(""இந்த இடத்தில திருப்பி முதல் பாராவ படிங்க ")

நன்கு இருட்டிவிட்டது . யாராவது வந்து தன்னை அழைப்பார்கள் என ஒரு மூலையில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும்  போய் விட்டது. இனி என்னத்த என்று எரிச்சலுடன் வாசலில் இருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார் . இனி அவரின் வார்த்தைகளில் .............

                                     "மூணு  பிளசர் வண்டி  சர்ர்ருன்னு போச்சு. எனக்கா வயத்தெரிச்சல் ! இருந்திருந்து  எப்படியாப்பட்ட ஒரு ஆளு ஊருக்கு வர்றாரு ! நா  பொறந்த நேரம் சரி இல்ல! இல்லன்னா அங்க அப்படி கேவலப்பட்டு உக்காருவனா ?'' அதனால போன பிளசர் காரை திரும்பி கூட பாக்கலை . அப்பிடியே  உட்கார்ந்தவன்  அரவம் கேட்டு நிமிந்து பார்த்தா அங்க வந்து நின்ன பிளசர்ல இருந்து வளத்தின்னா வளத்தி அப்படி ஒரு வளத்தி , கருப்புன்னா கருப்பு அப்பிடி ஒரு கருப்பு , நேரா என்ன பாத்து வந்தவர பாத்து  எனக்கே தெரியாம எந்திருச்சு நின்னுட்டேன் !!

"தம்பி இங்கன ஒதுங்க இடம் இருக்கு?'' !

 "ஆமா ,பின்னாடி இருக்கு ! ''

அவர் பின்னாடி திரும்பி வண்டிய பார்த்து  தலையை ஆட்டி ஜாடை காமிச்சார் .

            அவ்வளவுதா!!, வண்டியில இருந்து சும்மா சாட்டை மாதிரி எறங்கி வராரு!!  பார்த்த உடனே எனக்கு ஜொரம் வந்துருச்சு ! தீ மாதிரி இருக்கறாரு !! சாமி மாதிரி கிட்ட வந்து நிக்கிறாரு!! அவர   பின்னாடி கூட்டிட்டு போனது, கக்கூஸ் கதவு திறந்து விட்டு வாளியில தண்ணி மொண்டு வச்சது , போறப்ப அவரு என்ன முதுகில தட்டிட்டு போனது , மொதல்ல வந்து பேசுன வளந்தவரு சிரிச்சதுனு எல்லாமே
நிமிசமா முடிஞ்சு போச்சு!


 மின்னாடி  போன வண்டி எல்லாம் பின்னுக்கயே (reverse )கிட்ட வந்துருச்சு . 

எல்லா வண்டியும் ஊர் பக்கமா கிளம்பி போனப்பறம் என்னால தரையில நிக்க முடியல !!

"சாலுரா சுந்த்ராஜு , இக்க ஏமிரா ஈ பத்துகுல "னு (போதும்டா  சுந்த்ராஜு, இனி என்னடா வேணும் இந்த பிறவியில)  ஆகிபோச்சு .


 ( இந்த கதையை முதலில் சொன்ன  போது சுந்தராஜ் தாத்தாவின்  வயது 60 க்கு மேல் .என் வயது 10அல்லது 12 தான்.ஆனால் எத்தனை தடவை இந்த கதையை கேட்டேன் என்பது என் நினைவில் இல்லை . கல்லூரியில் படிக்கும் போது கூட,  ஒரு தடவ ''அவரை பார்த்த  கதையை சொல்லுங்க'' ன்னு கேட்டிருக்கிறேன் .')


            எப்போது அவர் இந்த கதை சொன்னாலும் சொல்லி முடித்தவுடன் கேட்பார் !  "செப்பு நுவ்வு நிஜம் அண்டவா? ரேதா? (சொல்லு நீ நிஜம்னு சொல்றியா ?இல்லையா?) என்பார். பக்கத்தில் கேட்கும் பெரியவர்கள் நக்கலாக சிரிப்பார்கள் . பாவம்  யாருமே அவர்  சொல்வதை கடைசிவரை ஒத்து கொள்ளவேயில்லை .  ஆனால் அவரும் சளைக்கவில்லை . வருத்தப்படவும் மாட்டார் .

             அப்பாவிடம் சொன்னேன் ,"நிஜமாதான்பா இருக்கும் !".
 அப்பா சிரித்துக்கொண்டார் .

                  ஆனால் எனக்கு உண்மை என்றே தோன்றுகிறது.
நேருவிடமும், காமராஜரிடமுமா  போய் கேட்க முடியுமா ? கேட்கவே முடிந்தாலும்  எப்படி கேட்பது!!! ?

Friday, August 24, 2012

4. போத்தன்ன நாயக்கர் !

                            
                    மிக சிறு வயதில்  நிறைய நாள் அந்த செருப்பு வாசல் ரூம் கதவுக்கு பின்னாடி கிடந்தது.  குறைஞ்சது ஆறரை அடிக்கு மேல இருந்தால்தான் அவ்வளவு பெரிய செருப்பு தேவைப்படும் . அந்த செருப்பில் கால் நுழைத்து பார்த்ததும்  ,விரலை விடும் வளையம் தாண்டி என் கால் முடிந்ததும், அதை அந்த இடத்தில் இருந்து நகற்ற  முடியவில்லை என்பதும்  நினைவில் உள்ளது.
                             ஆனால் அம்மாவின் நினைவில் இல்லை. எப்படி? ஒருவேளை அதை அணிந்த கால்களை பற்றியும் காலுக்கு உரியவர் பற்றியும் நிறைய விஷயங்கள் பேசப் பட்டதால் அந்த செருப்பு கற்பனையில் உருவாகி விட்டதா?
                    இல்லை!  நன்கு நினைவில் உள்ளது . மிக கடினமான தோலினால் செய்யப்பட்டு வெள்ளை நைலான் நூலினால் சுற்றிலும் தைக்கப்பட்டிருந்தது . சிறுது மேலே சுவரில் அவரின் படம் , சின்னதாக முறுக்கப்பட்ட மீசை , மிக அடர்த்தியான புருவங்கள் . கொஞ்சம்,  இல்லை !இல்லை !   நிறையவே கடுமையான முகம். பின்னொரு நாளில் அந்த படம் உள்ளே எடுத்து வைக்கப்பட்டு விட்டது( எட்ட மொறச்சி சூசி  ஈ தாத்தா )1*

                    போத்தன்னா நாயக்கர், சரியாக சொல்ல முடியவில்லை .120 அல்லது 130 வருடங்கள் இருக்குமா? இருக்கும்.  அந்த கால மனிதர்களை அவர்கள் செய்து கொண்ட திருமணங்களையும் மற்ற சில பழக்க வழக்கங்களை கொண்டும் நல்லவர் என்றும் கெட்டவர்  என்று முத்திரை குத்த ஆரம்பித்தால் ? அதனால் போத்தன்ன நாயக்கர் நல்லவர் என்றே சொல்லி கொள்கிறேன் .




                                          வீதியில் அவர்  நடந்து வரும்  போது  எதிரில் வரும் ஆளை சின்ன கண்களால் ஊடுருவி பார்த்தார் என்றால் எதிர் ஆளுக்கு அடி வயிற்றில் சிலீரிடும் . பயமுறுத்தும் கம்பீரம் . ஒட்ட வெட்டப்பட்ட தலை முடி ..கள்வர்களையும் அதுதான் பயமுறுத்தி இருக்க வேண்டும். அவர்கள் பிடிபட்டால் பஞ்சாயத்துக்கு இவர்தான் செல்வார் . விசாரிக்க போத்தி நாயக்கர் வருகிறார் என்றால் ஓன்று அவன் குற்றத்தை ஒப்பு கொள்வான் .இல்லாவிட்டால் சரியான துப்பு கொடுப்பான்.கட்டி வைக்கப்பட்டு   அவன் உதை படுவதை பார்ப்பவன் கூட திருட்டை விட்டு விடுவான்.

              இப்படியாப்பட்ட நாயக்கர்  எப்படி கள்வர்களால் மிகவும் மதிக்கப்பட்டார்  என்பது புரியவில்லை. பௌர்ணமி அன்று அவருக்கு கள்வர்களிடம் இருந்து அழைப்பு வந்து விடும். முழு நிலவு வெளிச்சத்தில் ஊர் எல்லையில் அவரை அழைக்க ஆள் வந்து விடும். (என்னடா ஒழுங்கா இருக்கீ ங்களா ? என்னை கூட்டிட்டு போய்  ஒட்கார வெச்சிட்டு எங்கயாவது போய்  கை வச்சிங்க , படுவா! தொலச்சிப்புடுவேன் !!!இல்லைங்க சாமி! செய்வமா அப்பிடி? )
ஆனால் அவருக்கும் தெரியும் , அவருக்கு தெரியும் என்று அவன்களுக்கும் தெரியும். ஒரு சில விசயங்களை இப்படி விட்டு பிடித்தால்தான் சரியாக இருக்கும். (ஈ பினாலகு வெருவும் வுண்டாலா ! வுடிசினு பட்டாலா ! கண்ட்டி பக்கல்னே பெட்டுகோவாலா! )2*





           நடைபயணமாக மலை அடிவாரம் சென்று பின் சிறிது தூரம் மேலே ஏறி இந்த ஊர்வலம் செல்லும். பேச்சும் அதிரடி சிரிப்புமாக வரும் அவரை பார்க்கும் போது அவங்களுக்கு, இவரா அன்னிக்கு சாவடி அடித்தார் என   தோணும்.

      (கள்வர் இன மக்களின் பேச்சு நடையை  முடிந்த வரை முயற்சி செய்துள்ளேன்.பேசி பழக்கம் இல்லை .ஆனால் கேட்டு வளர்ந்தது  . நம்  கிராமங்களை சுற்றி  வாழ்ந்த இம்மக்கள் பின்னாளில் ,கடும் 
உ ழைப்பாளிகளாக  ஆகி விட்டனர். நம் மக்கள் அவர்களையும் , அவர்கள் நம்மையும் சார்ந்து ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் )

             நல்ல இளம் ஆடாப்  பார்த்து அறுத்து முதல் நாள்  இரவே துண்டம் போட்டு உப்புல  ஊற வெச்சிருவாங்க . அன்னிக்கு வெள்ளன கோழி கூப்பிட   மின்னாடி (ஏன்னா அந்த கோழி குழம்புக்கு ரெடியாயிட்டு இருக்கும்) வர மிளகாப் பொடியையும்  ,மல்லி பொடியையும் விளக்கெண்ணெய் ,கெட்டி தயிரோட கலந்து அதில இந்த துண்டங்களை போட்டு நல்லா ஊற வைச்சுருவாங்க .நல்லா வெயில் உச்சிக்கு வந்ததும் முதல்லயே சுத்தம் பண்ணி  வெச்சிருக் -கிற கொதிக்கிற பாறையில3*  வரிசையா பரப்பி வெச்சு அதை சுத்தி மூட்டம்4*போட்டு , ஒரு தடவை பெரட்டி போட்டா வெயில் விழற நேரத்துக்கு கறி  நல்லா வெந்துரும். வெந்த கறிய  பதமா எடுத்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பெசரி5* அரச எலயப் பரப்பி அதுல பக்குவமா வெச்சு மேல வாள எலயப் போட்டு மூடி வெச்சுருப்பாங்க .

         வெயில் விழுந்தப்புறமா நாலஞ்சு கோழியை பிடிச்சு சுத்தம் பண்ணி பக்குவமா நல்லெண்ணெய் விட்டு பூண்டு வெங்காயத்த தட்டி போட்டு காரசாரமா  கொழம்பு வெச்சுருவாங்க .மல்லிபூ போல  வடிச்ச சோறு , நாயக்கர் வர்ற நேரத்துக்கு அரச எலயில மல மாதிரி தட்டி விருந்து தயாரா இருக்கும்.அப்புறம் என்ன? சாப்பிட வேண்டியதுதானே?

          முதல்ல அவரை மனை போட்டு ஒட்கார வச்சு பெரிய வாள எலய
விரிச்சு பதமா பரிமாறி ,ம்ம்ம்! என்று அவரிடம் இருந்து ருசிக்கு ஒரு பாராட்டு வந்ததும் எல்லாரும் சந்தோசமா சாப்பிட ஒக்காருவாங்க . "தண்ணி " வேணும்னா  ரெண்டு ரெண்டு பேரா  போயி மறவா ஒக்காந்து குடிச்சிட்டு வரணும்.அவருக்கு எதுக்க மூச்!  அவருக்கு தெரியும் மறவா நடக்கறது.
ஆனா ,"எளவு ஒக்காந்து சாப்பிடாம எங்கடா  போயிட்டு வரீங்க ? " என்பார் .
அவங்களும் அசட்டு சிரிப்போட சமாளிப்பாங்க. நடு இரவு வரை செல்லும் விருந்து முடிந்ததும் பத்திரமாக ஊர் எல்லை வரை கூட வந்து வழி அனுப்புவார்கள். கையோட வாள எலயில பால்கோவா ****(நீங்க நினைக்கிற மாதிரி சீல்தூர் பால்கோவா  இல்லைங்ககட்டி அனுப்புவாங்க.
போறப்போ மறக்காம சொல்லுவார் .டேய் ! கைய கால வெச்சுட்டு அணுகி இருங்கடா !இல்லேன்னா பிச்சிபிடுவேன் !ஆமா !~!
   
     

           **** காட்டு எருமைகள் கன்று பிறந்தவுடன் இறந்து விட்டாலோ அல்லது கன்று குடித்தது போக பால் மீதம் இருந்தாலோ மடியை பாறையில் தேய்த்து பாலை வெளியேற்றி விடும் .அது ஓரிரு நாளில் நன்கு காய்ந்து இருக்கும். அதை கத்தியில் செதுக்கி சேகரித்து வைப்பார்கள். பாலில் இயற்கையாக உள்ள அளவான இனிப்புடன் இருக்கும் இந்த பால்கோவா விலை மதிப்பு இல்லாத மிக  அபூர்வமான ஒன்று.



1*தாத்தா எப்படி முறைச்சு பாக்குறார் !
2*இந்த பயகளுக்கு பயமும் இருக்கனும் ! விட்டும் பிடிக்கணும்! கண்ணு பக்கத்துலயே வெச்சிக்கணும்!
3*பாறாங்கல்
4*தணல் .
5*கலந்து  

Monday, August 20, 2012

3. Who is that?

                                                                                               
















  Gordon Peckhom அவனுடைய  எடுபிடி ஆட்களுடன் செண்பகனூர் (கொடைக்கானல்) பங்களாவில் இருந்து  இறங்கும்  போதே துபாஷ் 1* தடுத்தான் பிரசாதம் வாங்குவது போல்.  மோவாயில்  கையை வைத்து  உடலை இரண்டாக மடித்து Sir , A  Humble request .Sir ! It  is already  the Sun came up sir ! Why Don 't  we  start tomorrow Sir !!  Because  It  is  not good  to Cross  those villages after sunset sir !

                   அசட்டு தைரியமும் , புது பதவி கொடுத்த  ஆணவமும் ,  கோர்டானை எப்போதும் நிதானம் அற்றவனாகவே  வைத்திருந்தது .  பிடிவாதமாக கிளம்பினான். சோர்ந்து விட்ட குதிரைகளுக்கு   பெரியகுளம் வரும்போது  வாயில்  நுரை தள்ளி விட்டது!  ''இந்த கூறு கெட்ட  பயலிடம் சொல்லி ஒரு பிரயோஜனம் இல்லை'' என்று துபாஷ் வாயை மூடிக் கொண்டான் .சோர்ந்து விட்ட ஆட்களை பார்த்த துரைக்கு  அவர்களை மேலும் சிரமப்படுத்த அடங்காத ஆசை ஏற்பட்டது . நிற்க விடாமல் தன் குதிரையை வேகமாக ஓட்டினான் .
"பாவி பயல் !! எங்கயாவது அடிபட்டு சாவான் !! முனங்கினாலும்  வேறு வழியில்லாமல் அனைவரும் அவனை பின்தொடர்ந்தனர் .

                சூரியன் சுத்தமாக மறைய இருள் கவ்விய பாதையில் இரண்டு பக்கமும் அடர்ந்த  மரங்கள். அவற்றின் பெரிய கிளைகள் தீப்பந்த ஒளியில் அரக்கனின் கைகள் போல் அலைந்து திகில் கிளப்பியது!  இந்த ஊர்வலம் ஒரு நாழிகை அமைதியாகவே சென்றது . உள்ளே ஒரு பயப் பந்து  தொண்டையை அடைக்க வெளியே காட்டாமல் Gordon துரை ,"குட்டு உடாகாரா  குருவப்பா "2* என்று  அமைதியாக குதிரையை செலுத்திக் கொண்டிருந்தான் .

 













                         துபாஷி ன்  அலறல்  கேட்ட போது  கீழே விழுந்து விட்டான் என்றுதான் அனைவரும் திரும்பி பார்த்தனர்.   ஆனால் அடுத்தடுத்து  , தொம் ! தொம் ! என்று பெரிய தேங்காய் அளவு உருண்டை கற்கள் நாலா பக்கங்களில் இருந்தும் அம்பு போல் பறந்து வந்து இரக்கம் இல்லாமல் தாக்கின .மூச்சு விட நேரம் இல்லை ! துரையாவது ? மண்ணாங்கட்டியாவது ? அவனவன் திக்கு திசை தெரியாமல் சிதறி ஓடினான் ! அடர்ந்த புதர்களால் துரைக்கு ஒரு கண்ணெழவும் தெரிய வில்லை  . முட்டாபயலுக்கு  என்ன நடக்குதுன்னும் புரியல? மேல வந்து விழுறது கல்லு தான்னு  புரிஞ்சு சுதாரிக்கிற துக்குள்ளே ஏழெட்டு கல்ல மேல வாங்கிட்டான் !
மூஞ்சி முகரையெல்லாம் இரத்தம் ! பாவி பயலை ஏத்தின பாவத்திற்கு தானும் கல்லடி வாங்கிய குதிரை பாவம் தறிகெட்டு ஓடி குப்பற விழுந்தது!

       ஏமிரா தோவல ஏமோ கூத்தலு ! போய்  சூடண்ரா !3* சத்தமாக கூவிக்கொண்டே கதவை திறந்து ஓடி வந்த வெங்கப்ப நாயக்கரின் காலடியில்  தொப்பென மூட்டை மாதிரி வந்து விழுந்தான் gordon durai !! விழுந்தது அடிபட்ட ஆள் என தெரியவும், கூப்பாடு போட்டு ஊரை கூட்டிய அவர் அவனுக்கு வேணுமான காரியத்தை செய்ய ஆரம்பித்தார். காயத்தை துடைத்து பச்சிலைகளை உருவி நசுக்கி காயம் பட்ட இடத்தில் கட்டினார் . "தெப்படம் ! எருசி போய் உண்ணான்டுரா '' 4*கேலி பேசினாலும் துரைக்கு  நல்ல வைத்தியம் செய்யப்பட்டது.
                 இது இத்தோடு நிற்கவில்லை ! தொடர்கதையானது ! ஒவ்வொருதரம் துரைமார்  கல்லடி வாங்குவதும் நாயக்கன்மார்  கட்டு போட்டு கவனித்து அனுப்புவதும் தொடர்ந்தது . பாவம் துரைகள் ! இதில் அடி ஒவ்வொன்னும் இடியா இருக்க," அழகாச்சும்?  அழகான பொண்ணாச்சும்  போங்கப்பா!!''

             வழக்கமாக  பழைய  ஆட்களின்  குடியிருப்புக்கு  அருகே தான் அடி விழ ஆரம்பிக்கும் !  அதனால் அவர்கள் தான் அனைத்துக்கும் காரணம் என ஒற்றர்களால் சொல்லப்பட்டது . வெள்ளையர்களால் கட்டி வைத்து  உதைக்கப்பட்ட அவன்கள்  செத்தாலும் நாங்க செய்யலனுதான்  சொன்னானுங்க ! யாரும் நம்பல ! வெள்ளையர்களால் முழுதும் மதிக்கப்பட்ட  நம்மவங்க அப்புறம் நிம்மதியா இருந்தாங்க!  ஒதுக்குபுறமா இருந்த அவங்க மொத்த ஊருக்கும் உரிமைபட்டவங்க ஆயிட்டாங்க !!அவங்களை பொருத்தமட்டும் அவங்க எவனுக்கும் கை கட்டல! கட்டவும் மாட்டாங்க !

                 ஒரு நிமிஷம் !! கடைசி மட்டும் கல்லெடுத்து அடிச்சவனுங்க  யாருன்றது எனக்கு பெரும் குழப்பமாவே இருக்கு! உங்களுக்கு தெரிஞ்சா  நீங்களாவது எனக்கு சொல்லுங்க!!!!!!!Please !!!!

1*-மொழிபெயர்ப் பாலர்
2*உன் மனதில் உள்ளதை வெளியே கட்டாதேடா  குருவப்பா ! (common  slang )
 3*ஏதோ  சத்தம் கேட்குது ! போய் பாருங்கடா !
   4* முட்டாள்! பயந்து போய்  இருக்கான் !

Sunday, August 19, 2012

2. NATCHIAAR !



      

தடத்தில் இருந்து விலகிய மாட்டை வண்டி தடத்திற்கு திருப்பி ஓட்டிய சீனி நாயக்கரின் மனம் மிக கலக்கமடைந்திருந்தது.


நேற்று இரவு ஊர் முழுதும் யாரும் உறங்கவில்லை. இவரும் உறக்கம் பிடிக்காமல் திண்ணையில் "தெள்ளவல்லாலு ''1* குத்துக்கால் வைத்து உட்கார்ந்து விட்டு இனி சரிபடாது என்று வண்டி கட்டிக் கொண்டு "சேனிக்கு''2* கிளம்பி விட்டார். ஆனாலும் மனம் ஒரு நிலையில் இல்லை. வந்த இடத்தில் வாயை மூடி நம்ம வேலையை நாம பார்த்தாலும் இந்த பயங்க பாக்க விடணுமே

தங்கள் வீட்டு பெண்கள் தெரு முனையில் நின்று சண்டையிட்டு ஒருவர் முடியை மற்றவர் இழுத்து கூச்சல் போட்டு கொண்டு இருக்க இந்த பெண்கள் அடக்கமாக சாணியால் முற்றம் அலம்பி கோலம் போடுவதும், நல்ல படியாக சமைத்து குடும்பத்தினற்கு பரிமாறி , இன்முகத்துடன் வளைய வருவதும் அவ்வூரினரின் பொறாமையை மெல்ல கிளறி விட்டது.



சமயம் பார்த்து துரைகளிடம் வத்தி வைக்கப்பட்டது. அதுவும் முக்கியமாக பெண்களை பற்றியும்,அவர்களின் அழகைப் பற்றியும். அவன்களோ சண்டாள பயல்கள். கேக்க வேணுமா ? அழகாகஇருப்பது குறித்து அவ்வூர் பெண்கள் வருத்தப்படும்படியானது .பெண்களை காப்பாற்றுவதே இப்போது இவர்களின் முக்கியமான வேலையாக ஆகி விட்டது.

இத்தனை நாள் காடு கழனிக்கு தனியாக செல்வது மட்டுமே ஆபத்தாக இருந்தது. வெள்ளைக்காரன் தூரமாக வரும் போதே ஊருக்குள் தகவல் வந்து விடும்.உடனே இளம் பெண்களை மாட்டுக்கு வைக்கோல் போடும் காடியில்3* படுக்க வைத்து மேலே நிறைய வைக்கோல் போட்டு மூடி விடுவர். மேலெல்லாம் சுல்  சுல்லென்று வைக்கோல் குத்த, மாடு எங்கே வைக்கோலுடன் நம்மையும் குதறி விடுமோ என்று அந்த பெண்கள் அனுபவித்த வேதனை.........       

ஆனால் ரெண்டு நாள் முன்னாடி ராத்திரி நடந்தது மிக அநியாயம். குறிப்பாக அடையாளம் சொல்லப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்க முடியாமல் தகவல் சொன்னவனையே , வெள்ளைக்காரன் அடி சவட்டி விட அவன் நாட்சியாரம்மா வீட்டுக்கு கைகாட்டிவிட்டான்.

                        சீனி நாயக்கரின் அண்ணன்  மகன் கொண்ட நாயக்கர். கொண்ட நாயக்கரின் மனைவி நாச்சியார் பேரழகி. நல்ல இல்லாள். திருமணம் ஆகி ஆறே மாதம் தான் ஆகி இருந்தது. காடியில் ஒளிந்திருந்த நாட்சியாரை (''துப்பு சொன்ன படவா கட்சிதமாக சொல்லி இருக்கான்'' ) முடியை பிடித்து வெள்ளைக்காரன் வெளியே இழுத்து போட்டான் . ஓடோடி வந்து தடுத்த கொண்ட நாயக்கரை நாலு கையாள்கள் சேர்ந்து கொண்டு கழியால் அடித்த அடி சொல்லி மாளாது . தலையில் வழிந்த இரத்தத்துடன் அவரும் நினைவு தப்பும் வரை மனைவியை காக்க போராடினார். அவர் நினைவு தப்பிய அந்த நொடியில் வெள்ளையன் பிடியில் இருந்து திமிறிய நாச்சியார் கொல்லை கிணற்றில் குதித்தாள் .
குதித்த நொடியில் மூச்சை அடக்கி உள்ளே சென்று சமாதியானாள்.இருட்டில் தேடி வெளியே எடுக்கும் போது நாட்சியார் தெய்வமாகி விட்டாள் ,ஊருக்கே!! (வெள்ளையன் ஆண்ட காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் இல்லாத இடம் இல்லை.)

சீனி நாயக்கர் மனதுக்குள் மிக விசனப்பட்டுப் போனார். எப்படிப் பட்ட பொண்ணு! சொந்த மக மாதிரியா பிரியமா இருப்பா. (சின்ன மாவா !! மீ ஒகரிக்கி கோசரம் எசுறு பெட்டதி ஏமிட்டிகி? இக்கட வொச்சி போஞ் செய்யண்ட!)4*வீட்டம்மா இறந்த பிறகு ஆதரிக்க குழந்தைகள் இல்லாமல் 8 வருடமாக வெந்து வேகாமல் தானாக சமைத்து சாப்பிட்டு நொந்து போயிருந்த சீனி நாயக்கருக்கு நாட்சியார் மருமகளாக மட்டுமல்ல அன்ன பூரணியாகவே இருந்தாள்.

''இட்டனே போத்த மனக்கு பத்துகு ரேதுரா சீனி!!!!"5* வண்டி ஒட்டி கொண்டே    சீனி நாயக்கரின் மனம் வேகமாக சில கணக்குகள் போட்டது. ஊரில் உள்ள சிலருடன் பேசி ஒரு திட்டம் வகுத்தனர் .அந்த திட்டம் இவர்களின் வாழ்க்கையை பல பல படிகள் உயர்த்தியது !

  1*-விடிய விடிய

2*-தோட்டத்துக்கு

3*-மாடுகள் நிற்கும் கொட்டகையில் அவற்றுக்கு முன்னாள் உள்ள நீளமான தடுப்பு பலகையுடன் வைக்கோல் போட உள்ள அமைப்பு .

4* சின்ன மாமா!! உங்க ஒருத்தருக்கு தனியாக சமைப்பது ஏன் ? இங்க வந்து சாப்பிடுங்க !

5*இப்படியே போனா நமக்கு பிழைப்பு இல்லடா சீனி !!!

Friday, August 17, 2012

1.Golden Pebbles!

H                                                                                       பெரும் உழைப்பாளிகளாய்  இருந்த அந்த மக்கள் தங்களுடன் கொண்டு வந்தது சலியாத உழைப்பை மட்டுமே . தென் தமிழ்நாடு அவர்களை  வரவேற்ற  அளவு  மக்கள் வரவேற்கவில்லை .ஆனால்  மிக்க புத்தி சாதுர்யம் மிக்க இந்த மக்கள் சிறிய அளவு நிலங்களில்* தங்களிடம் இருந்த தரமான விதைகளை கொண்டு விவசாயம்  செய்ய ஆரம்பித்து விட்டனர் .  ஊரின் எல்லையில்  தங்கள் குடி இருப்பை அமைத்து கொண்டனர். இவர்கள் நமக்கு போட்டி இல்லை என்ற நினைப்பில் அவ்வூர் மக்கள் இவர்களை விட்டு விட்டாலும் இவர்களின் கடும் உழைப்பின் பலன்களை விடவில்லை . இவர்களின் கோழிகள் அவர்கள் வீட்டு குழம்பில் கொதித்தன . அசந்த நேரத்தில்  இவர்களின் கொழுத்த ஆடு மாடுகள் தூர சந்தையில்  நல்ல விலைக்கு விற்கப்பட்டன . அந்த மக்கள் தங்கள் பொறுமையாலும் இடையறாத உழைப்பினாலும் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வந்தனர் . சிறு வயதுக்காரர்களின்  கோபம் பெரியவர்களின்  அறிவுரையால் அடக்கப்பட்டது.வெள்ளை  துரைகளும் துரைசாணிகளும் ஓய்வெடுக்க மலை  உச்சியில் ஒரு ஊர் அமைக்கப்பட்டது (Kodaikanal)  இவ்வழியே சென்ற அவர்களுக்கு  இந்த மக்களின்  உழைப்பும்,  உபசரிப்பும்  பிடித்தமாக இருந்தது . அது சிலரின் பொறாமையை கிளறி விட்டது . சில சங்கடங்களை கொண்டு வந்தது . அந்த ஊர் ''லக்ஷ்மி நாராயண பெருமாள் புரம்''  என்ற சிறிய ஊர் . 

                   

* ஜமீன்களின் சுக போக வாழ்வால்  கவனிப்பு இன்றி பெருமளவு  விளை நிலங்கள்  தரிசாக இருந்தது . தன்னால் இயன்ற அளவு ஒருவன் கல்லை தூக்கி எரிந்து அந்த நிலத்தை தன்  வசமாக்கிக் கொண்டு விவசாயம்                     செய்யலாம் . ஆனால் வரி வசூல் செய்ய ஜமீன்  ஆட்கள் தப்பாது வந்து    விடுவார்கள் .