மிக சிறு வயதில் நிறைய நாள் அந்த செருப்பு வாசல் ரூம் கதவுக்கு பின்னாடி கிடந்தது. குறைஞ்சது ஆறரை அடிக்கு மேல இருந்தால்தான் அவ்வளவு பெரிய செருப்பு தேவைப்படும் . அந்த செருப்பில் கால் நுழைத்து பார்த்ததும் ,விரலை விடும் வளையம் தாண்டி என் கால் முடிந்ததும், அதை அந்த இடத்தில் இருந்து நகற்ற முடியவில்லை என்பதும் நினைவில் உள்ளது.
ஆனால் அம்மாவின் நினைவில் இல்லை. எப்படி? ஒருவேளை அதை அணிந்த கால்களை பற்றியும் காலுக்கு உரியவர் பற்றியும் நிறைய விஷயங்கள் பேசப் பட்டதால் அந்த செருப்பு கற்பனையில் உருவாகி விட்டதா?
இல்லை! நன்கு நினைவில் உள்ளது . மிக கடினமான தோலினால் செய்யப்பட்டு வெள்ளை நைலான் நூலினால் சுற்றிலும் தைக்கப்பட்டிருந்தது . சிறுது மேலே சுவரில் அவரின் படம் , சின்னதாக முறுக்கப்பட்ட மீசை , மிக அடர்த்தியான புருவங்கள் . கொஞ்சம், இல்லை !இல்லை ! நிறையவே கடுமையான முகம். பின்னொரு நாளில் அந்த படம் உள்ளே எடுத்து வைக்கப்பட்டு விட்டது( எட்ட மொறச்சி சூசி ஈ தாத்தா )1*.
போத்தன்னா நாயக்கர், சரியாக சொல்ல முடியவில்லை .120 அல்லது 130 வருடங்கள் இருக்குமா? இருக்கும். அந்த கால மனிதர்களை அவர்கள் செய்து கொண்ட திருமணங்களையும் மற்ற சில பழக்க வழக்கங்களை கொண்டும் நல்லவர் என்றும் கெட்டவர் என்று முத்திரை குத்த ஆரம்பித்தால் ? அதனால் போத்தன்ன நாயக்கர் நல்லவர் என்றே சொல்லி கொள்கிறேன் .
இப்படியாப்பட்ட நாயக்கர் எப்படி கள்வர்களால் மிகவும் மதிக்கப்பட்டார் என்பது புரியவில்லை. பௌர்ணமி அன்று அவருக்கு கள்வர்களிடம் இருந்து அழைப்பு வந்து விடும். முழு நிலவு வெளிச்சத்தில் ஊர் எல்லையில் அவரை அழைக்க ஆள் வந்து விடும். (என்னடா ஒழுங்கா இருக்கீ ங்களா ? என்னை கூட்டிட்டு போய் ஒட்கார வெச்சிட்டு எங்கயாவது போய் கை வச்சிங்க , படுவா! தொலச்சிப்புடுவேன் !!!இல்லைங்க சாமி! செய்வமா அப்பிடி? )
ஆனால் அவருக்கும் தெரியும் , அவருக்கு தெரியும் என்று அவன்களுக்கும் தெரியும். ஒரு சில விசயங்களை இப்படி விட்டு பிடித்தால்தான் சரியாக இருக்கும். (ஈ பினாலகு வெருவும் வுண்டாலா ! வுடிசினு பட்டாலா ! கண்ட்டி பக்கல்னே பெட்டுகோவாலா! )2*
(கள்வர் இன மக்களின் பேச்சு நடையை முடிந்த வரை முயற்சி செய்துள்ளேன்.பேசி பழக்கம் இல்லை .ஆனால் கேட்டு வளர்ந்தது . நம் கிராமங்களை சுற்றி வாழ்ந்த இம்மக்கள் பின்னாளில் ,கடும்
உ ழைப்பாளிகளாக ஆகி விட்டனர். நம் மக்கள் அவர்களையும் , அவர்கள் நம்மையும் சார்ந்து ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் )
நல்ல இளம் ஆடாப் பார்த்து அறுத்து முதல் நாள் இரவே துண்டம் போட்டு உப்புல ஊற வெச்சிருவாங்க . அன்னிக்கு வெள்ளன கோழி கூப்பிட மின்னாடி (ஏன்னா அந்த கோழி குழம்புக்கு ரெடியாயிட்டு இருக்கும்) வர மிளகாப் பொடியையும் ,மல்லி பொடியையும் விளக்கெண்ணெய் ,கெட்டி தயிரோட கலந்து அதில இந்த துண்டங்களை போட்டு நல்லா ஊற வைச்சுருவாங்க .நல்லா வெயில் உச்சிக்கு வந்ததும் முதல்லயே சுத்தம் பண்ணி வெச்சிருக் -கிற கொதிக்கிற பாறையில3* வரிசையா பரப்பி வெச்சு அதை சுத்தி மூட்டம்4*போட்டு , ஒரு தடவை பெரட்டி போட்டா வெயில் விழற நேரத்துக்கு கறி நல்லா வெந்துரும். வெந்த கறிய பதமா எடுத்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பெசரி5* அரச எலயப் பரப்பி அதுல பக்குவமா வெச்சு மேல வாள எலயப் போட்டு மூடி வெச்சுருப்பாங்க .
வெயில் விழுந்தப்புறமா நாலஞ்சு கோழியை பிடிச்சு சுத்தம் பண்ணி பக்குவமா நல்லெண்ணெய் விட்டு பூண்டு வெங்காயத்த தட்டி போட்டு காரசாரமா கொழம்பு வெச்சுருவாங்க .மல்லிபூ போல வடிச்ச சோறு , நாயக்கர் வர்ற நேரத்துக்கு அரச எலயில மல மாதிரி தட்டி விருந்து தயாரா இருக்கும்.அப்புறம் என்ன? சாப்பிட வேண்டியதுதானே?
முதல்ல அவரை மனை போட்டு ஒட்கார வச்சு பெரிய வாள எலய
விரிச்சு பதமா பரிமாறி ,ம்ம்ம்! என்று அவரிடம் இருந்து ருசிக்கு ஒரு பாராட்டு வந்ததும் எல்லாரும் சந்தோசமா சாப்பிட ஒக்காருவாங்க . "தண்ணி " வேணும்னா ரெண்டு ரெண்டு பேரா போயி மறவா ஒக்காந்து குடிச்சிட்டு வரணும்.அவருக்கு எதுக்க மூச்! அவருக்கு தெரியும் மறவா நடக்கறது.
ஆனா ,"எளவு ஒக்காந்து சாப்பிடாம எங்கடா போயிட்டு வரீங்க ? " என்பார் .
அவங்களும் அசட்டு சிரிப்போட சமாளிப்பாங்க. நடு இரவு வரை செல்லும் விருந்து முடிந்ததும் பத்திரமாக ஊர் எல்லை வரை கூட வந்து வழி அனுப்புவார்கள். கையோட வாள எலயில பால்கோவா ****(நீங்க நினைக்கிற மாதிரி சீல்தூர் பால்கோவா இல்லைங்க) கட்டி அனுப்புவாங்க.
போறப்போ மறக்காம சொல்லுவார் .டேய் ! கைய கால வெச்சுட்டு அணுகி இருங்கடா !இல்லேன்னா பிச்சிபிடுவேன் !ஆமா !~!
**** காட்டு எருமைகள் கன்று பிறந்தவுடன் இறந்து விட்டாலோ அல்லது கன்று குடித்தது போக பால் மீதம் இருந்தாலோ மடியை பாறையில் தேய்த்து பாலை வெளியேற்றி விடும் .அது ஓரிரு நாளில் நன்கு காய்ந்து இருக்கும். அதை கத்தியில் செதுக்கி சேகரித்து வைப்பார்கள். பாலில் இயற்கையாக உள்ள அளவான இனிப்புடன் இருக்கும் இந்த பால்கோவா விலை மதிப்பு இல்லாத மிக அபூர்வமான ஒன்று.
1*தாத்தா எப்படி முறைச்சு பாக்குறார் !
2*இந்த பயகளுக்கு பயமும் இருக்கனும் ! விட்டும் பிடிக்கணும்! கண்ணு பக்கத்துலயே வெச்சிக்கணும்!
3*பாறாங்கல்
4*தணல் .
5*கலந்து

No comments:
Post a Comment